3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சி.பி.ஐ., தீவிரம்: ராஜா மற்றும் அதிகாரிகளிடம் நாளை விசாரணை

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் பெகுரா, ரிலையன்ஸ் (ஏ.டி.ஏ.ஜி.,) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கவுதம் தோஷி ஆகியோரை, மீண்டும் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும், சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது.ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள், சி.பி.ஐ., சார்பில், டில்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் வேலைகளில், சி.பி.ஐ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் (ஏ.டி.ஏ.ஜி.,) மேலாண்மை இயக்குனர் கவுதம் தோஷி ஆகியோரிடம், மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, சி.பி.ஐ., சார்பில், டில்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி ஓ.பி.சைனி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்,"எங்கள் கட்சிக்காரர்கள், ஏற்கனவே இருளில் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதை சி.பி.ஐ., விளக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்த உத்தரவில்,"இந்த விவகாரம், வழக்கு தொடர்ந்த சி.பி.ஐ., தரப்புக்கும், கோர்ட்டுக்கும் இடையேயானது. தற்போதைய சூழ்நிலையில், இதுபற்றி கேள்வி எழுப்புவதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, எந்த உரிமையும் கிடையாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அனுமதி அளிக்கப்படுகிறது' என்றார்.இதைத் தொடர்ந்து, ராஜா, பெகுரா, கவுதம் ஆகியோரிடம், நாளை (18ம் தேதி) விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கில், மேலும் சில சாட்சிகளை சேர்ப்பதற்கும், ஆவணங்களை தாக்கல் செய்வதற்கும், சி.பி.ஐ.,க்கு, டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ள ஆவணங்களில், பிரபல நிறுவனங்களின் மக்கள் தொடர்பாளராக செயல்பட்ட நிரா ராடியா, பிரபலங்களுடன் டெலிபோனில் பேசிய உரையாடல் பதிவுகளும் இடம் பெறவுள்ளது.
பிரபலங்கள் பீதி:ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்வதில், சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி உட்பட மேலும் சில பிரபலங்களின் பெயர், மூன்றாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், அது தெடார்பான விவரங்களை சேகரிப்பதற்காகவே, முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் பெகுரா, கவுதம் ஆகியோரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதனால், முறைகேட்டில் ஈடுபட்ட பிரபலங்கள் கடும் பீதிஅடைந்துள்ளனர்.
Tags: , , , , ,

About author

My Name is Meeto. I like Blogging and I love Blogging Common lets Rock. . .